ஐ.நா.நிபுணர்களிடம் மாட்டிக்கொண்ட புலனாய்வு அதிகாரி!

293 0

dig-sisira-mendis-picture-2-pngபயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

ஜெனிவாவில் நடந்து வரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59வது கூட்டத்தொடரில், இலங்கை குறித்த மீளாய்வு நேற்று முன்தினமும், நேற்றும் இடம்பெற்றது.

இந்த அமர்வில் இலங்கைத் தரப்புக் குழுவில் தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிசிர மென்டிசும் இடம்பெற்றிருந்தார்.

இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்தவர் சிசிர மென்டிஸ்.

இவரது தலைமையின் கீழ் இருந்த அதிகாரிகளால் திட்டமிட்டு, முறைப்படுத்தப்பட்ட சித்திரவதைகள், தடுப்புக்காவலில் இருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாவது நாள் அமர்வில், சிசிர மென்டிசிடம், இறுதிக்கட்டப் போரின் போது, தடுப்புக்காவலில் இருந்த கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் கேள்விகளை எழுப்பினர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் காயர், நேற்றைய அமர்வில் சிசிர மென்டிசிடம், 2008-2009 காலப்பகுதியில், பிரதி காவல்துறை மமா அதிபராக இருந்த போது, இலங்கை பாதுகாப்பு படைகளால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக அறிவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், அனுபவம்மிக்க ஒருவர் இந்தக் குழுவின் முன் நிற்பது அசாதாரணமானது. நீங்கள் அல்லது உங்களது பொறுப்பில் இருந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் அல்லது பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், ஐ.நா நிபுணர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் அளிக்காமல் சிசிர மென்டிஸ் மௌனமாக இருந்தார்.அப்போது குறிக்கிட்டு அவரைக் காப்பாற்றிய இலங்கையின் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய, இதுகுறித்து கேள்விகளுக்கு 48 மணிநேரத்தில் எழுத்துமூலம் பதிலளிப்பதாகவும், தேவையான பரப்பில் விரிவான பதில்களை அளிக்க முடியும் என்றும் கூறினார்.

இந்த அமர்வுக்குப் பின்னர், இதுகுறித்து சிசிர மென்டிஸ் மற்றும் ஜெயந்த ஜெயசூரிய ஆகியோரிடம், ஏபி செய்தியாளர் கருத்துக்களை அறிய முயன்ற போதும், அவர்கள் பேச மறுத்து விட்டனர்.