உள்ளூராட்சி சபைகளை பாராட்டிய அரச அதிபர்

255 0

மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் உள்ளுராட்சி சபைகள் தொற்று நீக்கல் விசிறல் முதல் மக்கள் ஒன்று கூடும் சந்தை போன்ற இடங்களை முகாமைத்துவம் செய்வது வரையிலான அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமலிருக்க இவர்களின் பங்களிப்பு மேலானது – பாராட்டப்பட வேண்டியது என்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் பதவியேற்று முதன்முறையாக உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை சந்திக்கும் கூட்டம் நேற்று (4) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அரசாங்க அதிபர் இக்கருத்தினைத் தெரிவித்தார். மேலும்,

கொரோனா தொற்று பரவாமலிருக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையினால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் குறிப்பாக மரக்கறி உற்பத்தி போன்றவை சந்தைப்படுத்த முடியாமல் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்காக மாவட்ட செயலகத்தினால் இம்மரக்கறி உற்பத்திகளைக் இரண்டு தடவைகள் கொள்வணவு செய்து அனைத்து பிரதேச செயலகங்கள் வாயிலாக விற்பனை செய்ய நவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.

இதேபோன்று எமது மாவட்டத்தில் காணப்படுகின்ற மரக்கறி, மீன், பால் போன்ற உள்ளுர் உற்பத்திகளை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கும் நியாய விலையில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகளையும், சில்லறை வியாபாரிகளையும் ஒருங்கிணைப்புச் செய்து மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்வரவேண்டும் என அரசாங்க அதிபர் உள்ளுராட்சி சபைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டதுடன் மேலும் பலவிடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.