தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமர் உறுதியளித்தாரா

258 0

நேற்று (4) பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சந்திப்பின் போது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் விஜயராம இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது,

காணி விடுவிப்பு, மக்களுக்கான நிவாரணப் பணிகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது.

முக்கியமாக தமிழ் அரசியல் கைதிகள் 70 பேர் வரையில் இருப்பதாகவும் அவர்களில் 50 பேர் தண்டனை பெற்றுள்ள நிலையில் இருப்பதாகவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

குறித்த அரசியல் கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தால் அவர்களின் குடும்பங்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை தருமாறு கோரிய பிரதமர், தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் பேசுவதாக உறுதி அளித்ததுடன், சட்டத்தில் இடமிருக்குமானால் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தாய் இறந்துவிட்ட நிலையில் அநாதை ஆகிய இரு பிள்ளைகளுக்காக அவர்களது தந்தையான அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் கோரிக்கை விடுத்த போதும், அது அவரது ஆட்சி முடியும் வரையில் நிறைவேற்றப்பட்டு இருக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்க முன் வருவார் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.