இந்தியாவில் இருந்து மேலும் ஒருதொகை மாணவர்கள் சிறிலங்காவுக்கு அழைத்துவரப்பட்டனர்

417 0

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் இந்தியாவில் சிக்கித் தவித்த மேலும் ஒரு தொகை மாணவர்கள் சிறிலங்காவுக்குஅழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறித்த விமானம் மாணவர்களை அழைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலை 5.15 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -1187 என்ற விசேட விமானமே இன்று காலை 10.15 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்று திரும்பியுள்ளது.

இதேவேளை சார்க் நாடுகளில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளின் முதல் கட்டமானது இதனுடன் முடிவடையும் என்றும் சுட்டிக்காட்டிய, ஸ்ரீலங்க எயர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், இரண்டாம் கட்ட நடவடிக்கை அடுத்த சில நாட்களில் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும் இதுவரை 946 சிறிலங்கா மாணவர்கள் நான்கு நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் 684 பேர் இந்தியாவின் ஐந்து விமான நிலையங்களிலிருந்து சிறப்பு விமானம் மூலமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலிருந்து 113 மாணவர்களும், நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து 76 மாணவர்களும், பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 73 மாணவர்களும் இலங்கை விமான சேவையின் சிறப்பு விமானங்களின் உதவியுடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் கீழ் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.