ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டில் 5 சவப்பெட்டிகள் வருகின்றன, மரணச் சான்றிதழ் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் சிலர் காத்திருக்கின்றனர், கரோனாவுக்கு 5,466 பேர் பலியாகியுள்ளனர், 78,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 6276 புதிய கரோனா கேஸ்கள் தோன்றியுள்ளன, ஆனால் இது எதுவும் பிரேசில் வலதுசாரி அதிபர் போல்சொனாரோவைப் மனிதாபிமான ரீதியாகப் பாதிக்கவில்லை.
‘இதனாலெல்லாம் என்ன?’ என்று கூச்சமில்லாமல் கேட்கிறார், என அவர் மீது மக்கள் கொந்தளிக்கின்றனர்.. அமேசோனாஸ் மாநிலத்தின் தலைநகர் மானவ்ஸில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடம் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 449 கரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் மரண எண்ணிக்கை 5,466 ஆக அதிகரித்துள்ளது.
ரியோ டி ஜெனிரியோவில் இடுகாடுகள் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. இடுகாடுகளி இடமில்லாமல் புதைப்பவர்கள் ஒன்றின் மேல் ஒன்று என சவப்பெட்டிகளை புதைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு வலுத்தவுடன் இம்மாதிரி செய்வதை நிறுத்தி விட்டனர் வெட்டியான்கள்.
இந்நிலமைகளில் அதிபர் ஒரு அதிபராக வினையாற்றாமல், “இதனால் என்ன? ஐ அம் சாரி, என்னை என்னச் செய்யச் சொல்கிறீர்கள்? என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது” என்று கூறியுள்ளது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பிரேசிலிலிருந்து விமானம் அல்லது படகு மூலமே செல்லக்கூடிய மானவ்சில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களில் உடல்கள் வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நிலமைகளை உணராமல் நாட்டின் அதிபர் பொறுப்பில்லாமல் பேசுவதாக அங்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

