தென்கொரியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்கு பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் அதிகபட்சமாக இருந்த கரோனா தொற்று இரண்டு மாதம் கழித்து ஒற்றை இலக்கமாக மாறியுள்ளது. பிப்ரவரி 15க்குப் பிறகு நோய்த் தடுப்புக்கு எதிராக மிக சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் சுமார் 10,765 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 பேர் பலியாகியுள்ளனர். 9,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தென்கொரியாவில் ஏப்ரல் மாதம் முதலே கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 முதல் பொதுமுடக்கத்தில் சில முக்கியத் தளர்வுகளைத் தென்கொரிய அரசு அமல்படுத்தியது. இதன்படி பார்கள், நைட் கிளப்புகள், உள்ளரங்கு விளையாட்டுகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.
ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் தென்கொரிய அரசு தற்போது இறங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 32,20,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,28,239 பேர் பலியாகியுள்ளனர். 10,00,983 பேர் குணமடைந்துள்ளனர்.

