நர்சிங் மாணவிகளை ஊக்கப்படுத்த நர்சு உடையில் ஆஸ்பத்திரிக்கு வந்த மும்பை மேயர்

294 0

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சிங் மாணவிகளை ஊக்கப்படுத்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் நர்சு உடையில் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அவர்களுடன் பேசினார்.

மும்பையில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் நகரில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் நர்சிங் மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் மாநகராட்சி மருத்துவ கல்லூரிகளில் படித்து வருபவர்கள் ஆவர்.

இந்தநிலையில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நர்சிங் மாணவிகளை ஊக்கப்படுத்த மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர் முடிவு செய்தார். இதையடுத்து அவர் நர்சு உடையில் மும்பையில் உள்ள நாயர், சயான் உள்ளிட்ட மாநகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு சென்றார். அப்போது அவர் நர்சு மற்றும் நர்சிங் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

3 முறை கவுன்சிலரான சிவசேனாவை சோ்ந்த மேயர் கிஷோரி பெட்னேகர் முன்னாள் நர்சு ஆவார். இவர் மும்பை துறைமுக கழக ஆஸ்பத்திரியில் 1993-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை நர்சாக பணியாற்றியவர்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவரிடம் இருந்து நர்சு உடையை வாங்கி அணிந்தேன். 10 ஆண்டுகளுக்கு மேல் நான் நர்சாக பணிபுரிந்ததால், அவர்களின் நிலை எனக்கு நன்கு புரியும். இதுபோன்ற சவால் நிறைந்த சூழலில் பணிபுரிவது நாட்டுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு என அவர்களிடம் கூறினேன்” என்றார்.