கொரோனா தொற்று மையமாக விளங்கும் நியூயார்க் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் – கவர்னர் ஆண்ட்ரூ

313 0

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மையமாக திகழும் நியூயார்க் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று அந்த மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்தார்.அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையம் என்று சொல்லப்படக்கூடிய அளவில் மிக மோசமான பாதிப்புக்கு ஆளான மாகாணம், நியூயார்க். நகரமும் நியூயார்க்தான்.

அந்த மாகாணத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு அதிகமாக கொரோனா வைரஸ் பாதித்தது. 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் உச்சம் தொட்ட நியூயார்க் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த நோய்க்கு அங்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் ஆறுதல் கொள்ளத்தக்க அளவில் குறைந்து வருகிறது.

இது அங்குள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கையைத் தருவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் நியூயார்க்கில் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ விரும்புகிறார். பல கட்டங்களாக இதை செய்து முடிப்போம் என அவர் அறிவித்துள்ளார்.

இதையொட்டி நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல் கட்டமாக கட்டுமானத்துறையும், உற்பத்தி துறையும் திறந்து விடப்படும். இரண்டாவது கட்டத்தில் ஒவ்வொரு வர்த்தகமாக திறந்து விடப்படும். அத்தியாவசிய தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு வர்த்தக நடவடிக்கைகளும் திறந்து விடப்படும்.

ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையே 2 வார இடைவெளி விடப்படும். திறந்து விடப்படுவதால் ஏற்படுகிற விளைவுகள் மதிப்பிடப்படும். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமலும், ஆஸ்பத்திரிகளில் சேர்ப்பது அதிகரிக்காமலும் இருக்க வேண்டும். இதை கண்காணிப்போம்.

எந்தவொரு பிராந்தியத்திலும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எதையும் நீங்கள் செய்ய முடியாது. இது ஒரு எச்சரிக்கை ஆகும். விரைவில் திறக்கக்கூடிய பகுதிகளாக நியூயார்க்கின் வடக்கு பகுதிகள் இருக்கும். அங்கு கொரோனா வைரஸ் தொற்று ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

நியூயார்க் நகரம், நாசாவ் கவுண்டி, வெஸ்ட்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகளை திறப்பது என்பது மிகவும் சிக்கலானது. அதற்கு பிராந்திய அளவிலான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பல மாகாண ஒருங்கிணைப்பு மிக முக்கியம். ஏனென்றால் நியுஜெர்சி, கனெக்டிகட், நியூயார்க் நகரம் ஆகியவை அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று இரண்டறக்கலந்தது ஆகும். மக்கள் போவார்கள். வருவார்கள். ஒரு இடத்தில் வசித்துக்கொண்டு இன்னொரு இடத்துக்கு வேலைக்கு போவார்கள். எனவே ஒருங்கிணைப்பு என்பது முக்கியம்.

நியூயார்க் மாகாணத்தை பொறுத்தமட்டில் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் சேர்க்கை குறைந்து வருகிறது. உயிர்ப்பலிகளும் குறைந்து வருகின்றன. சனிக்கிழமை பலி எண்ணிக்கை 367-ஆக குறைந்துள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் தொற்றின் அளவு 0.8 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்றுநோய் தாக்கிய 10 பேர் மற்ற 8 பேருக்கு பரப்புகிறார்கள். இதை 1-க்கு கீழாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் புதிது புதிதாக பரவுவதை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

நியூயார்க் நகரத்திலும், மாகாணத்திலும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் படிப்படியாக தொடங்கி விட்டால் அது அந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அஸ்திவாரமாக மாறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.