மாதகல் நுணசை வித்தியாலயத்தை சிறிலங்கா கடற்படையினர் ஆக்கிரமிப்பு!

384 0

இந்தியாவில் இருந்து கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப் போருட்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைக்க கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி மாதகல் நுணசை வித்தியாலயத்துக்கு நேற்று (15) கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர்.

இதனால் பாடசாலையைச் சூழவுள்ள மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது. காெரோனா வைரஸ் தொடர்பான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே கண்காணிப்பு நடவடிக்கைக்காக கடற்படையினரை தங்க வைக்கவே குறித்த பாடசாலை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மாதகலில் ஒரு பாடசாலையும் இவ்வாறு விமானப் படை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.