200 ஏழை, எளியோருக்கு ஒரு நாள் ஊதியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: விருதுநகர் காவல்துறையின் கருணை முகம்

360 0

விருதுநகர் அருகே 200 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை செலவிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொடுத்தனர் மல்லாங்கிணர் காவல் நிலைய காவலர்கள்.

கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு நாளை முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணர் காவல் நிலைய எஸ்.ஐ.அசோக்குமார் மற்றும் போலீஸார் அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள், ஏழை, எளியோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கத் திட்டமிட்டனர்.

அதற்காக தங்களது ஒரு நாள் ஊதியத்தைக் கொடுத்தனர். அதன் மூலம் 200 குடும்பத்தினருக்கு தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகளைக் கொள்முதல் செய்தனர்.

மல்லாங்கிணர்,வரலொட்டி, திம்மன்பட்டி, கல்குறிச்சி, மேட்டுப்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுக்கேச் சென்று அத்தியாவசியப் பொருள்களையும் காய்கறிகளையும் போலீஸார் வழங்கினர்.

இதுபோன்று, 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்க தயார் செய்து வீடு வீடாகச் சென்று வழங்க உள்ளதாகவும் எஸ்.ஐ அசோக்குமார் தெரிவித்தார்.