வயோதிபர், சிறுநீரக நோயாளிகள், விசேட தேவையுடையோருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

223 0

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து மிகவும் கவனம் செலுத்த வேண்டியவர்களாக கருதப்படும் வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கான 5,000 ரூபா கொடுப்பனவு இன்று 06 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இந்த விடயத்துக்கு முன்னுரிமையளித்து இன்று 06 ஆம் திகதி திங்கட்கிழமை 5,000 ரூபாவை கிராம சேவர்கள் ஊடாக முழுமையாக வழங்கி நிறைவு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேடசெயலணியின் ஊடாக தீர்மானிக்கப்பட்டதன் படி வயோதிபர், சிறுநீரக நோயாளிகள் விசேட தேவையுடையோருக்கு 5,000 ரூபாவை வழங்கும் நடவடிக்கை இன்று நடைபெறுகிறது.

இதன்படி தற்போது விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெற்றுக்கொண்டிருக்கும் மற்றும் காத்திருப்பு பட்டியலிலுள்ள அனைவருக்கும் இன்று 06 ஆம் திகதி 5,000 ரூபா விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவாக வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். அதேபோன்று சிறுநீரக நோயாளிகளுக்கும் 5,000 ரூபா வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று ஏப்ரல் மாதம் 2,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ள 70 வயதுக்குமேற்பட்ட வயோதிபர்களுக்கும் இன்று மிகுதி 3,000 ரூபாவும் வீடுகளுக்கு வந்து வழங்கப்படும்.

70 வயதுக்குமேற்பட்ட காத்திருப்பு பட்டியலிலுள்ள வயோதிபர்களுக்கும் முழுமையாக 5,000 ரூபா இன்று வழங்கப்படும். இன்றைய தினத்துக்குள் கிராமசேவகர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கிறது.