’தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்’

208 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷ, உடனடியாக நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் எம்.பி மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அமைச்சர் விமல் வீரவன்ச இன்னமும் சிறுபிள்ளைதனமாக பேசுகிறார் என விமர்சித்துள்ளதுடன்,  எம்பிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டிவரும் என்பதற்காகவே, நாடாளுமன்றத்தைக் கூட்டக்கூடாது என்று அமைச்சர் விமல் வீரவன்ச கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தேவையில்லை என நான் சொல்கிறேன். அதை எதிரணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்பார்கள் என நான் நம்புகிறேன். உண்மையில் இது ஒரு பிரச்சினை இல்லை. இதையெலாம் ஒரு பிரச்சினையாக கூறும் விமல் போன்றர்களின் சிந்தனைதான் பிரச்சினை. இவரது மூளையை ஐஸ் பெட்டியில் வைத்து இந்த தேசம் பாதுகாக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘அரச பக்கத்தை சார்ந்த இன்னொரு முன்னாள் எம்பியான உதய கம்மன்பில, இன்னொரு  காரணம் கண்டு பிடித்து சொல்கிறார். அதாவது, ‘நாடாளுமன்றத்தில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த கூடாது. அது சமூக இடைவெளி விதியை மீறும்’. என்கிறார். இவரது மூளையையும் ஐஸ் பெட்டியில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘எம்.பீக்கள் வீடுகளில் இருந்தபடி, தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படலாம். உலகின் வேறுபல நாடுகளில் இத்தகைய காணொளி அமர்வுகள் இன்று நடத்தப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் இன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். எனவே இந்தக் காணொளி நாடாளுமன்ற அமர்வை,  அனைத்து மக்களும் பார்த்து கேட்க முடியும். இதனால், இன்றைய தேசிய நெருக்கடி தொடர்பில் நாட்டில் பொதுஜன அபிப்பிராயம் உருவாகும். அரசியல் பேதங்களுக்கு அப்பால், இதுதான் இன்றைய தேவை’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,  கொரோனா தொற்று தொடர்பில் ஆராயுமாறும் ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள், பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காததால், நெருக்கடியாகியுள்ள திக்கற்ற மக்களின் வாழ்வாதாரம் பற்றி ஆராயுமாறும் வலிறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்கக் கூடிய அபாயம் பற்றி ஆராயுமாறும் ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசமைப்பு நெருக்கடி தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறியுள்ளமை தொடர்பிலும் ஆராயுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.