தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொண்ட 25 கிராம மக்கள்

241 0

பொன்னேரி அருகே கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊர் எல்லையில் சாலையை மறித்து கம்பு வேலி அமைத்து உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட கடப்பாக்கம், தத்தைமஞ்சி, பழவேற்காடு, காட்டுப்பள்ளி, அரசூர், காட்டாவூர், வன்னிப்பாக்கம், மாதவரம் உள்பட 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்து உள்ளனர்.

இதற்காக தங்கள் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாதபடியும், வெளியூரை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்குள் நுழையாதபடியும் தங்கள் ஊர் எல்லையில் சாலையின் குறுக்கே கம்புகளால் தடுப்பு வேலி அமைத்து சாலைகளை மூடி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் ஜெயகிர்பிரபு ஆகியோர் 25 கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் தடுப்பு வேலி அமைத்து இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் இருவரும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்த பொன்னேரி அடுத்த மாதவரம் கிராமத்துக்கு நடந்தே சென்றனர்.

அங்கு ஒவ்வொரு வீடு, வீடாக சென்ற அவர்கள், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் உங்களுக்கு உணவு தேவைப்பட்டால் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடி உணவு வரும். யாரும் வெளியே செல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என பொதுமக்களிடம் தாசில்தார் கேட்டுக்கொண்டார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் கனிமொழிசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.