கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்- போப் ஆண்டவர் அறிவுரை

314 0

பிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் சிதைந்துள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்நாட்டு போரை நிறுத்தி விட்டு கொரோனா வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆன்டனியோ குட்ரெசின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் உள்நாட்டு போரை நிறுத்திவிட்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு உலகளாவிய போரில் நாம் ஒன்றிணைந்து கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உள்நாட்டு போரை நிறுத்த வேண்டியது அவசியம்” என கூறினார்.