படுகொலையாளிகளை ஜனாதிபதியால் விடுவிக்க முடிந்தால் நீதிமன்றத்தை மூடிவிடுங்கள்- சிவமோகன்

240 0

பொதுமக்களை படுகொலை செய்தவர்களை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள் என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் யாழ். மிருசுவில் பகுதியில் எட்டுத் தமிழர்களைப் படுகொலைசெய்த கொலையாளியான சுனில் ரத்னாயக்க என்னும் இராணுவச் சிப்பாயை பொதுமன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளியாகிருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நேற்றைய தினம் ஊடகங்களில் வந்த செய்தியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாழ். மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களை கொலை செய்த கொலையாளியை ஜனாதிபதி, பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களைப் படுகொலை செய்தவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் கொலையாளியே. இராணுவம் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு பொதுமன்னிப்பு வழங்குவதாக இருந்தால் தமிழர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு நிற்பது?

கட்டாயப்படுத்தல்கள் மூலமும் சித்திரவதைகள் மூலமும் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று நீதிமன்றம் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இந்தப் பேரினவாத அரசாங்கங்கள் என்றும் கரிசனை கொண்டதில்லை.

ஆனால், ஒரு அநீதியைச் செய்து நேரடியாக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட கொலையாளியை இந்த ஜனாதிபதி விடுவித்துள்ளார். இதை ‘ஒரே தேசம் ஒரே மக்கள்’ என்ற கொள்கையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா?

மேலும், பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் அவர்களை விடுவிப்பதற்கு முன்னர் தீர்ப்பு வழங்கிய நீதித்துறை, சட்டத்துறை மற்றும் விசாரணை செய்தவர்களின் சிபாரிசுகள் பெறப்பட வேண்டும். அவை பெறப்பட்டனவா என்னும் விபரங்களும் இதுவரை வெளிவரவில்லை.

எனவே, கொரோனா அனர்த்த காலத்தைச் சாட்டாக வைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் இழைக்கப்படுமாக இருந்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது? இந்தச் செயற்பாட்டினை வன்மையா கண்டிக்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.