இளையான்குடி பண்ணை வீட்டில் அனுமதியின்றி தங்கியிருந்த 11 வெளிநாட்டினர் உட்பட 13 பேருக்கு சிகிச்சை: ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி

205 0

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பண்ணை வீட்டில் அனுமதியின்றி தங்கியிருந்த மலேசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த11 பேர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த 2 பேர் சிவகங்கைஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மலேசியாவைச் சேர்ந்த 7 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த4 பேர் என மொத்தம் 11 பேர் கடந்தபிப்ரவரியில் டெல்லி வந்துள்ளனர். ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்த அவர்கள், மார்ச் 19-ம் தேதி திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வந்துள்ளனர். பின்பு அங்கிருந்து ரயில் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில்நிலையத்துக்கு மார்ச் 21-ம் தேதிவந்தனர். அதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வந்தனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இளையான்குடி வட்டத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் விவரத்தை தெரிவிக்க வேண்டுமென வட்டாட்சியர் ரமேஷ் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிவாசலில் தங்கியிருந்த 11 பேரும் நேற்று முன்தினம் சிவகங்கை சாலையில் உள்ளதனியார் பண்ணை வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவியாக உள்ளூரைச் சேர்ந்த 2 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டினர் தங்கியிருப்பதை அறிந்த வட்டாட்சியர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பொம்மையாசாமி ஆகியோர் தனியார் பண்ணை வீட்டில் இருந்த 13பேரையும் விசாரித்தனர். தொடர்ந்துசாலைக்கிராமம் மருத்துவர் சந்திரபிரகாஷ் தலைமையிலான குழுவினர் 13 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனர். இதில்மலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து அனைவரையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களை அங்குதனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.