ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

297 0

ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் ருத்தர தாண்டவமாடி வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் 656 உயிர்களை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. அந்தநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்து, சீனாவின் உயிர்பலியைக் காட்டிலும் அதிகரித்துவிட்டது

அந்த நாட்டின் துணைப் பிரதமர் கேர்மன் கால்வோவுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவந்த வார்த்தை ஒரே நேரத்தில் தீவிரவாதிகளும், தீவிரவாதமும் இருந்தது. ஆனால், தீவிரவாதிகளையே நடுங்கச்செய்யும் வார்த்தையாக கரோனா வைரஸ் இருந்து வருகிறது. உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கொடூரமான கால்தடத்தை கரோனா வைரஸ் பதித்து மக்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கி வருகிறது.

உலகளவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 21 ஆயிரத்து 283 பேர் பலியாகியுள்ளார்கள், 4.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.1.14 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.

சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய இந்த கரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. அதில் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் கடும் உயிர்சேதத்தை சந்தித்து வருகின்றன.

இதில் ஸ்பெயின் நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 656 பேர் பலியாகினர், இதனால் உயிரிழந்தோர் எண்ணி்க்கை அங்கு 3,647 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,501 பேராக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்பெயின் அரசு திணறி வரும் நிலையில் அந்நாட்டின் துணைப்பிரதமர் கார்மன் கால்வோவுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து ஸ்பெயின் அரசு வெளியிட்ட செய்தியில் “ துணைப்பிரதமர் கார்மன் கால்வோவுக்கு நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனையில் அவர் கோவிட்-19 வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் நலமாக இருக்கிறார், அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது