ஊரடங்கில் வெளியில் வருவதை தவிருங்கள் – வாகன ஓட்டிகளிடம் கைகூப்பி கெஞ்சிய போலீசார்

17 0

நம் நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஊரடங்கில் வெளியில் வருவதை தவிருங்கள் என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் கைகூப்பி கேட்டு கொண்டார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமல் ஆனது. தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்துவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இவ்வளவு அறிவுரைகள் விடுக்கப்பட்டு இருந்தாலும், ஆங்காங்கே சாலைகளில் சில வாகன ஓட்டிகள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே சென்ற வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஷீத், தன்னுடைய இருகரங்களையும் கூப்பி, ஊரடங்கில் வெளியில் வருவதை தவிருங்கள் என்று கெஞ்சினார்.

மேலும் அவர் வாகன ஓட்டிகளிடம், ‘வீட்டில் இருங்கள் என்றுதான் அரசு சொல்கிறது. நம் நாட்டுக்காக, குடும்பத்துக்காக வெளியில் வராதீர்கள். உங்கள் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறோம்’ என்று கூறினார். அவரின் இந்த வேண்டு கோளை சில வாகன ஓட்டிகள் கேட்டு, ‘இனிமேல் இப்படி வரமாட்டோம் சார்…’ என்று சொல்லிவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. அதில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டரின் வேண்டுகோளை பாராட்டி, நெகிழ்ச்சியில் அவர் காலிலும் விழுந்தார்.

அதேபோல், சென்னை திருமங்கலம் நெடுஞ்சாலையில் தடுப்பு வேலி அமைத்து, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வாகன ஓட்டிகளிடம் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கைகூப்பி கெஞ்சினார்.