சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்- ஒருவர் பலியானதால் பீதி

19 0

கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் புதிதாக ‘ஹண்டா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கிருந்து 197 நாடுகளுக்கு பரவி உள்ளது.

உலகம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். சுமார் 4½ லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் மட்டும் 3,281 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் தற்போது அந்த நாட்டில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது.

இந்தநிலையில் சீனாவில் புதிதாக ‘ஹண்டா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. சீனாவின் உன்னாவ் மாகாணத்தில் இருந்து ‌ஷயிங் மாகாணத்துக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்த போது பயணி ஒருவர் திடீரென இறந்தார்.

அவரை சோதித்து பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவருடன் பஸ்சில் பயணம் செய்த மற்ற 32 பேருக்கும் இந்த வைரஸ் தாக்கி உள்ளதா? என மருத்துவ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எலிகளை மட்டும் தாக்கும் இந்த வைரஸ் பிற விலங்குகளை தாக்காது. ஆனால் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளதால் சீனாவில் மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் புளூ காய்ச்சலை போன்றது ஆகும். தொடக்கத்தில் இதன் அறிகுறியாக காய்ச்சல், குளிர், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி ஆகியவை இருக்கும்.

இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். 10 நாட்களுக்கு பின்னரே ரத்த நாளங்களுக்கு செல்லும். தற்போது இந்த வைரஸ் தாக்குதலும் சீனாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவாது என்ற நிம்மதி இருந்தாலும், எலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களையும் பாதுகாக்க வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.