அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை!

346 0

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த 15ஆம் திகதி செம்மணி, இளையதம்பி வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சுவிட்சர்லாந்தில் இருந்துவந்த மதபோதனர் ஆராதனை நிகழ்த்தியிருந்தார். இவர் மீண்டும் சுவிட்ஸர்லாந்துக்கு திரும்பிச்சென்றுள்ள நிலையில் அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவருடன் தொடர்பினைப் பேணியவர்கள் மற்றும் தேவாலய ஆராதனையில் கலந்துகொண்டவர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்ட வவுனியா காத்தான்கோட்டம் மற்றும் புளியங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் பொதுசுகாதாரப் பரிசோதர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரில் கைக்குழந்தை மற்றும் 6 பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்குகின்றனர். இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாத நிலையில் அவர்களை வீட்டிலேயே 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதுதொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் எம்மால் வழங்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வருகிறோம்” என சுகாதார பரிசோதகர் மேஜெயா குறிப்பிட்டுள்ளார்.