வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல! கொரோனா உங்களை தேடிவருவதில்லை!

499 0

வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் அது உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் எனவே தேவையற்ற அச்சங்களை விடுத்து ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வைகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உலகம் இன்று திரும்பி பார்க்க கூடியதாக இந்த கோவிட் 19 என்ற வைரஸ் தொற்று காணப்படுகின்றது. இச் சுவாச தொற்று நோய் என்பது புதிய விடயமல்ல சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்த விடயமாகும். 1918 ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்பானிஸ்புளு, ஏசியன்புளு, கொங்கொங்புளு, ரஷ்யன்வுளு, சுவைன்புளு போன்றை சுவாச தொற்று நோய்கள் இந்த உலகத்தை வியாபித்து கடந்து சென்றுள்ளது.

எனவே இந்த கொவிட் 19 வைரஸ் என்பது எமக்கு புதியவிடயமல்ல என்பதனை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வைரஸ் என்பது சுவாசம் சம்பந்தமான நோய்களையே உருவாக்கும் உதாரணமாக சொல்லப் போனால் தடிமனில் வீரியம் கூடியதடிமலை உருவாக்க கூடியதொன்றாக நாங்கள் சொல்லலாம் இதற்கு மருந்து இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் இன்னொருவருக்கு காற்றால் பரவுகின்றது என்பதை விட இது தொடுகை மூலமே கூடுதலாக பரவுகின்றது. ஏனைய வைரஸ்போன்று காற்றால் பரவுகின்றது என மக்கள் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதில் ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த வைரஸ் தொடுகை மூலம் ஒரு இடத்தில் சென்றடைந்தால் சுமார் மூன்று நாட்கள் உயிருடன் இருக்கின்றது. இதுவே எமக்கு ஒரு சவாலான விடயமாக இருக்கின்றது.

இதனால் தான் கூறுகின்றோம் உங்களது கைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதால் இந்த தொற்றினை தவிர்த்துக் கொள்ளலாம். இதனூடாக மற்றவர்கள் தொற்றுக்கு உள்ளாவதையும் தவிர்த்துக் கொள்ளமுடியும்.

அடுத்ததாக வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் முகமாக தற்போதைய காலகட்டத்தில் வெளியில் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுங்கள், ; வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் குறித்து விளிப்புடன் இருங்கள், உறவினர், நண்பர்களுடன் கைகுழுக்குதல் நெருக்கமாக உறவாடுதலை தவிர்த்துக் கொள்ளுங்கள், தவிர்க்க முடியாத காரணத்தினால் உறவினர்கள் வீட்டுக்கு வருகை தந்தால் அருகிலிருந்து உரையாடுவதை தவிர்த்துக் கொள்வதுடன் பாதுகாப்பு கருதி தொற்று நீக்கி கொள்ளுகள் இவை வைரஸ்பரவுதலை முற்றுமுழுதாக தடுப்பற்கு உதவியாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் ஏற்படும் அறிகுறிகள்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முதலில் வரட்டு இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளே தற்போது கூடுதலானவர்களுக்கு இருப்பதாக அறியமுடிகின்றது. இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் வைத்திய ஆலோசனையை பெற வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கும் சாதாரண தடிமலுக்கும் என்ன வித்தியாசம் என்றால் தடிமல் உள்ளவர்களுக்கு மூக்கு வடிதல் தும்மல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. எனினும் இவ்வாறான அறிகுறிகளின் போது அனாவசியமாக பயம்கொள்வதை விடுத்து வைத்தியரை அணுகுதல் வேண்டும்

அத்துடன் உங்களை நீங்களே வீட்டில் தனிப்படுத்தி கொள்ளலாம். இதனை சுகாதார உத்தியோகத்தருக்கு தெரிவிப்பதன் மூலம் உங்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு சென்று விடுவார்கள் என்று பயம் கொள்ள தேவையில்லை ; உங்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளுடன் சுகாதார உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் உள்ளனர்

உங்களையும் பாதுகாத்து இந்த நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்ப்படுகின்றன. எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் கட்டாயமாகும்.

மக்கள் இந்த விடயத்தில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நூறு கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டால் அதில் இரண்டு பேர் மட்டுமே இறப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு ஆனால் மக்களிடையே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிடுவதாக தவறான எண்ணப்பாடு உள்ளது.

இவ் வைரஸ் தக்கம் வயது கூடிய நபர்களிடையே வீரியமாக உள்ளது. அதிலும் இருதய சத்திர சிகிச்சையை மேற் கொண்டவர்கள், ஆஸ்மா நோயுடையவர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள்

எனவே எமது வீடுகளில் உள்ள 50 வயதுக்கு மேற்பட் உறுப்பினர்களை கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். இது உங்களது தலையாய கடமையாகும் நீங்கள் வெளியில் சென்று வந்தால் உங்களுடைய குடும்பத்தை யோசித்துக் கொண்ட வீட்டுக்குள் காலடி வைக்க வேண்டும். கொரொனா வைரஸை பொறுத்தளவில் அது உங்களை தேடி வருவதில்லை நீங்களே அதைத் தேடிப்போகின்றீர்கள்.

நீங்கள் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்

இந்த வைரஸினை இல்லாமல் செய்வதற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு மருந்து கண்டுபிடித்தால் அது வருவதற்கு பல மாதங்களாகும்.

எனவே உங்களுக்கு இந்த கொரோனா தொற்று உள்ளது என்று நீங்கள் சந்தேகித்தால் முதலாவது நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை. முதலில் வெளியில் செல்லக்கூடாது. மறாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அறிவித்துவிட்டு உங்களை நீங்களே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்குபிறகு வைத்தியர்கள் நேரடியாக வருகை தந்து உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

எக்காரணம் கொண்டும் சோர்ந்து விடாதீர்கள் நீங்கள் சோர்வடைந்தால் உங்களது உடம்பில் நோய் எதிர்ப்பபு சக்தி குறைந்துவிடும். இதனால் நோயின் தாக்கம் கூடதலாக அமையும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றாக தூங்குங்கள், ஓய்வாக இருங்கள். விற்றமின்கள் உள்ள பழவகைகளை உண்ணுங்கள், காய்ச்சலுக்கு பாரசிட்டமால் உள்ளடெடுக்கலாம். தடிமலுக்கு வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

உங்களின் உடும்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியினூடாக இந்த நோயானது இல்லாமல் போகும் எனவே நீங்கள் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை மாறாக இந்த நோயினை இல்லாமல் செய்வதற்கு சமூகத்தில் இறக்கி அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய வைத்தியர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தளவில் இருபத்தினான்கு மணித்தியாலங்களும் இயங்ககூடிய ஆலோசனை மையம் ஒன்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அதனூடாகவும் உங்களது தேவைகளை, சந்தேகங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் குறித்து ; நீங்கள் அனாவசியமாக பயம்கொள்ள தேவையில்லை.