தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிப்பது சமூகத்தின் பொறுப்பு- கொரோனோ பரவும் சூழலில் சத்குரு வலியுறுத்தல்

182 0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வேலை இழந்து தவிக்கும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது நம் சமூகத்தின் பொறுப்பு என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. விமான போக்குவரத்து, பயணம் மற்றும் சுற்றுலா சார்ந்த பெரும் தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கும் ஒரு முக்கிய பிரிவினரான தினக் கூலித் தொழிலாளர்கள் மீது உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு தனது ட்விட்டர் பதிவு மூலம் வலியுறுத்தி உள்ளார். அதில் பல நாட்களாக தொடர்ந்து வேலை இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை தினமும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மிக மோசமான ஒன்றாகும். உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும். அவர்களுக்கு தினசரி உணவையேனும் வழங்குவது இந்த சமூகத்தின் பொறுப்பு. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதை முறியடிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்துக்கு வர திட்டமிட்டுள்ளவர்களுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள பயண ஆலோசனையின் அடிப்படையில் வழிக்காட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது.