பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

229 0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் குறித்த வழங்கு நீதிபதி டி.சூசைதாசனினால் விசாரணைக்கு விசேடமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கினை எதிர்வரும் சித்திரை மாதம் 02ஆம் திகதி வரையில் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.