மொசூலில் 60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்

312 0

201611112023235669_is-slaughters-60-people-over-treason-in-mosul-un_secvpfஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 60 பேரை கொடூரமாக கொன்று, அவர்களின் உடல்களை மின்சார கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

ஈராக்கின் ஒரு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு எதிராக ஈராக் ராணுவம் அமெரிக்க கூட்டுப்படையுடன் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தி பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளது. தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த முக்கிய நகரமான மொசூல் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் தாக்குதல் நடத்தி முன்னேறுகின்றனர்.

ஈராக் ராணுவத்தை சமாளிக்க முடியாமல் பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். மக்களுடன் மக்களாக அவர்களுடன் இணைந்து அவர்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால் ஈராக் ராணுவம் முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்த யோசித்து வருகிறது.

இந்நிலையில் தங்களுக்கு துரோகம் செய்ததாகவும், ராணுவத்திற்காக உளவு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டி அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி தீவிரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.

மொசூல் நகரில் நூற்றுக்கணக்கான அட்டூழியங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்தி வருகின்றனர் என்று குற்றம்சாட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் ரவிணா ஷம்தாசானி ‘‘கடந்த செவ்வாய்க்கிழமை துரோகம் செய்ததற்காகவும், ஈராக் ராணவத்திற்கு உதவியதாகவும் 40 பொது மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘‘கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆரஞ்சு நிற ஆடை அணிந்திருந்தனர். அதில் ‘traitors and agents of the ISF’ என்று எழுதப்பட்டிருந்தது. அவர்கள் உடல்கள் மொசூல் நகரத்தின் பல பகுதியின் மின்சார கம்பத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது’’  என்று தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) வடக்கு மொசூல் கபாத் ராணுவத் தளம் அருகே 20 பொதுமக்களை கொலை செய்துள்ளனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் ஈராக் ராணுவப் படைகளுக்கு செல்போன் மூலம் தகவல் கசிய விட்டதால் இந்த மரணதண்டனை முடிவு என்று எழுதப்பட்டிருந்தது.இந்த தண்டனை அனைத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவால் வழங்கப்பட்டுள்ளது.