தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை 7 மணியளவில் அம்பாறை – காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “போர்க் காலத்தில்கூட தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி இருக்கின்றனர்.
நிலங்கள் அபகரிக்கப்பட்டுவது, தேவைகள் நிறைவேற்றப்படுவதில் ஏற்படும் தாமதங்கள், இயலாமைகள் இவற்றையெல்லாம் நாங்கள் மனதிற்கொண்டு, இது சார்ந்த விடயங்களில் இந்த அம்பாறை மாவட்டத்துககு முன்னுரிமை அளித்து தமிழர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவோமானால் இரண்டு பிரதிநிதிகள்கூட பெற்றுக்கொள்ளலாம்.
அம்பாறை மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தேசியப் பட்டியல் பிரதியை நிச்சயம் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கை கூட்டத்தில் பேசப்பட்டு பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.

