ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பசிந்து ஹிருசான் என்ற மாணவன் தொடர்ந்தும் அதே பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் குமார விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், பசிந்து ஹிருசான் மீது குறிப்பிட்ட மூன்று மாணவர்கள் சில்லை சாய்த்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்றுவரும் பசிந்து ஹிருசான் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர் ஒருவர் பசிந்து ஹிருசான் மீது சில்லு ஒன்றை தள்ளிவிட்டமையால் அவரின் தலைப்பகுதியில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் பசிந்துவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
பசிந்துவின் மூளை பகுதி இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயர் கல்வி அமைச்சர் நேற்று அவரின் உடல் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட அறிக்கை தம்வசம் கிடைத்துள்ளதாக பதில் பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சிரேஸ்ட மாணவன் தவறிழைத்திருந்தால் அவரின் புலமைப்பரீசில் கொடுப்பனவு முழுமையாக இரத்துச் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிகிச்சை பெற்றுவரும் பசிந்து ஹிருசானுக்கு ஏதேனும் வெளிநாட்டு வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு அனுசரனை வழங்க தயார் எனவும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்து அலட்சியத்தால் ஏற்பட்டிருக்கலாம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் பேரவை ஆகியன நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெரிவித்துள்ளன.

