பொதுத்தேர்தல்களின் யானைச் சின்னத்தில், களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வழக்கத்தை, எந்தவொரு தரப்பினரின் தேவைக்காகவும் மாற்ற முடியாது என அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
கரந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வஜிர அபேவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “சஜித் தரப்பினர் இப்போதுவரை கூட்டணியொன்றை ஸ்தாபிக்கவில்லை.
அவர்கள் அரசியல் கட்சியொன்றை விலைக்கொடுத்து வாங்கி, அந்தக் கட்சியின் தலைவரை விலக்கி, புதுத் தலைவரை நியமித்து, அதிலுள்ள செயலாளரை விலக்கி, புதிய செயலாளர் ஒருவரை நியதித்து, இன்னும் சிலருக்கும் பதவிகளைக் கொடுத்து, அதற்கு எம்மையும் இணைந்துக் கொள்ளுமாறு கோருகிறார்கள்.
இப்படியான ஒரு கட்சியில் எதற்காக நாம் இணைய வேண்டும்? ஐக்கிய தேசியக்கட்சி இன்னும் பலமான நிலையில்தான் உள்ளது.
இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்துதான் நாடாளுமன்றுக்கு சென்றார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்சியானது, யானைச் சின்னத்தில்தான் தொடர்ந்தும் நாடாளுமன்றில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு தரப்பினரின் தேவைக்கு இணங்க, இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. உண்மையில், இது மிகவும் கீழ்த்தரமானதொரு செயற்பாடாகும். இது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவை அவமதிக்கும் செயற்பாடாகவே கருதப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகூட இவ்வாறு செயற்பட்டது கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.

