கொரோனா வைரஸ் எதிரொலி – முகக்கவசம் அணிந்து பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள்!

246 0

கொரோனா வைரஸ் எதிரொலியாக தெற்கு ரெயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

சீனாவில் தனது பயணத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

பரிசோதனையின் போது, யாருக்காவது கொரோனா பாதிப்பு அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை, அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரத்யேக வார்டில் வைத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக தற்போது ரெயில் நிலையங்களிலும் தீவிர நடவடிக்கை தொடங்கி உள்ளது.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா தொற்று தமிழகத்துக்கும் பரவலாம் என்று அச்சம் இருந்து வந்தது.

இதனால் ரெயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அந்தவகையில் நேற்று முதல் கட்டமாக, ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவுறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், அரக்கோணம் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் நேற்று முதல், முகக்கவசங்கள் அணிந்து பணி செய்து வருகின்றனர்.

பயணிகளிடம் டிக்கெட் சோதனையில் ஈடுபடும் பரிசோதகர்கள் உள்பட அனைவரும் முகக்கவசங்களுடன் காணப்பட்டனர். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு சென்னை கோட்ட மூத்த பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் முகக்கவசங்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து விமானநிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனை போன்று ரெயில் நிலையங்களிலும் பயணிகள் பரிசோதிக்கப்படுவார்கள் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரெயில் நிலையங்களில் ஊழியர்கள் முகக்கவசங்களுடன் காணப்படுவதால் பயணிகள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.