மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம்: ரவி உள்ளிட்ட 10 பேருக்குப் பிடியாணை!

325 0

மத்திய வங்கி பிணைமுறி மோடி வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்வதற்கு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்ற விசாரணைக்காக வந்தபோது கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைவாக நீதவானால் குறித்த 12 பேருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 12 சந்தேகநபர்கள் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்களாக அவர்களைப் பெயரிட்டு, பிடியாணையினைப் பெற்றுக்கொண்டு கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அன்றைய தினம் ஆலோசனை வழங்கியிருந்தார். இந்நிலையில் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.