வெள்ளை மாளிகையில் ஒபாமா – டிரம்ப் சந்திப்பு

230 0

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

உதவியாளர்கள் யாருமின்றி சுமார் 90 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது நாட்டின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஒபாமாவும், டிரம்ப்பும் விவாதித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பு மிக பிரமாதமாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள அதிபர் ஒபாமா, உங்களது வெற்றி அமெரிக்காவின் வெற்றி என்பதால் நீங்கள் வெற்றிபெற எங்களால் (ஜனநாயக கட்சி) இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம் என டிரம்ப்புக்கு வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.

உள்நாடு மற்றும் வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக டிரம்ப்புடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

’மரியாதை நிமித்தமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான எனது முதல் சந்திப்பு சுமார் பத்து நிமிடம் நீடிக்கும் என நான் நினைத்திருந்தேன் ஆனால், எதிர்பாராதவிதமாக ஒன்றரை மணிநேரம் வரை எங்கள் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அதிபர் ஒபாமா ஒரு சிறப்புக்குரிய மனிதர்.

அவருடன் இருந்தது ஒரு இனிமையான அனுபவம், இனியும் எங்களது சந்திப்புகள் அடிக்கடி தொடர வேண்டும் என விரும்புகிறேன்’ என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்புடன் அவருடைய மனைவி மெலனியா டிரம்ப்பும் வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தார். ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவை அவர் தனியாக சந்தித்துப் பேசினார்.