வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் பாரிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ். மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலயத்தின் கிழக்குத் திசையில் பருத்தித்துறை வீதியிலும், மேற்குத் திசையில் பருத்தித்துறை வீதி மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சந்திக்கும் இடத்திற்கு அண்மையிலும் வளைவு அமையப்பெறும்.
அதேநேரம், வடக்கு மற்றும் தெற்குத் திசைகளிலும் வளைவுகள் அமைப்பதற்காக அனுமதிகோரி யாழ். மாநகர சபைக்குக் கிடைத்த கோரிக்கை தொடர்பாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் ஆலயத்தின் புனிதத்தையும் மரபையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைக்க எண்ணும் குறித்த வளைவிற்கு எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கருத்துரைத்த உறுப்பினர்கள் குறித்த வளைவுகளை அமைக்க ஏகமனதாக அனுமதித்தனர். அதேநேரம் முடிந்தளவு அகலமாகவும் போதிய உயரத்துடனும் அமைக்கப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தநிலையில் சபை ஏகமனதாக முடிவெடுத்தது.

