ரூ.565 கோடியில் அமையவுள்ள மேட்டூர் – சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

345 0

மேட்டூர் – சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் பழனிசாமி, “மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர், ரூ.565 கோடியில் நீரேற்ற திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டம் சரபங்கா பகுதியில் உள்ள வறண்ட நீர்நிலைகளுக்குத் திருப்பி விடப்படும்” என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், “சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டங்கள் விவசாயம் மற்றும் குடிநீருக்கு மழையை நம்பியே உள்ளன. மழை சரிவர பெய்யாத காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. குடிநீர் சரிவர கிடைக்காததால் இப்பகுதிகளில் போதிய தொழிற்சாலைகளும் அமையவில்லை.

மழை சரிவர பெய்யாததால், நிலத்தடி நீரும் 300 மீட்டர் ஆழத்துக்குக்கீழ் சென்றுவிட்டது. எனவே, உயரமான பகுதியில் உள்ள இந்த வறண்ட நீர்நிலைகளுக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீரை மோட்டார் மூலம் எடுத்து, வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை இந்தத் திட்டம் மூலம் தங்கள் பகுதிகளுக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்ததால், இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதற்காக மேட்டூர் திப்பம்பட்டி கிராமத்தில் பிரதான நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது.

குறிப்பாக 30 நாட்களுக்கு விநாடிக்கு 214 கன அடி நீர் இத்திட்டத்தின் மூலம் எடுக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து உபரியாகச் செல்லும் நீரில், 555 மில்லியன் கன அடி நீர் இத்திட்டத்துக்காக திருப்பி விடப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எடப்பாடி பகுதியில் 33 ஏரிகள், எம்.காளிப்பட்டி பகுதியில் 67 ஏரிகள் என 100 ஏரிகள் மற்றும் 4,238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்துக்காக 241.05 ஏக்கர் பட்டா நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ.35 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

நிலம் எடுப்பு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இவற்றை பரிசீலித்த தமிழக அரசு தற்போது திட்டம் தொடர்பான பணிகளுக்கு ரூ.398 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம், நில எடுப்புக்கு ரூ.35 கோடியே 3 லட்சம் உட்பட ரூ.565 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 241.05 ஏக்கர் நிலம் எடுக்கவும் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 4) காலை சேலம் மாவட்டம், எடப்பாடி, இருப்பாளி ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்சியில் எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.