மாணவர்களிடையே நூல்கள் வாசிப்பை ஊக்குவிக்கவும் கலைத் திறமையை வளர்க்கவும், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் “ஆலமரத்தடியில்” என்னும் இலக்கிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்ச்சி, புதுச்சேரி வெள்ளாழ வீதியில் உள்ள மக்கள் தலைவர் வ.சுப்பையா -சரசுவதி சுப்பையா சமூக விஞ்ஞான இலக்கிய ஆய்வு மைய வளாகத்தில் நடந்தது.
மக்கள் தலைவர் சுப்பையாவின் அரும்பணிகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் அ.மு. சலீம் தொடக்க உரையாற்றினார். புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்ற சிறப்புத் தலைவர் மு.கு. ராமன், பொதுச்செயலாளர் பெ.பாலகங்காதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
நான் வாசித்த புத்தகம் என்னும் தலைப்பில் புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ப.ரவிக்குமார், 2019-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ. தர்மன் எழுதிய ‘சூல்’ என்னும் நாவல் பற்றிச் சிறப்புரையாற்றினார். மனிதர்க்கும் மற்ற உயிர்களுக்கும் தாயாக விளங்கிய கண்மாய்கள் அழிக்கப்பட்டதையும், நவீனமாக்கல், உலகமயமாதல் ஆகியவற்றின் காரணமாக கிராம ப்புறங்களில் இருந்த அறம் சார்ந்த வாழ்க்கை முறை அழிந்து வருவதையும் இந்நாவல் மையப்படுத்தியிருப்பதாக அவரது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட, ‘வகுப்பறைக்கு வெளியே’ என்னும் நூல் குறித்த அறிமுக உரையை லலிதா பெரியசாமி வழங்கினார். இந்நூலின் ஆசிரியர் தட்சிணமூர்த்தி இந்நூல் உருவானதற்கான காரணங்களை விளக்கிப்பேசினார். இளமுனைவர் பட்ட ஆய்வாளர் திவ்யா, பொன்னீலன் எழுதிய ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்னும் நூலை மையமாகக் கொண்டு ஜீவாவின் பொதுத்தொண்டினைப் பற்றி விளக்கினார்.

