வங்காளதேசம்: பாதுகாப்பு படையினர் ரோகிங்யா அகதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை – 7 பேர் பலி

352 0

வங்காளதேச நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைபொருள், ஆள் கடத்தல், கொள்ளை போன்ற சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்ட ரோகிங்கியா அகதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்த இவர்களில் சிலர், கடந்த 2012-ல் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 3.70 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள்வர்கள் வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வங்காளதேசத்தில் இருந்து கடல் வழியாக மலேசியா செல்ல பல ரோஹிங்யா அகதிகள் முயற்சி செய்துவருகின்றனர். மேலும், சில அகதிகள் போதைபொருள் கடத்தல் குற்றங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டின் ஹாக்ஸ் பசார் என்ற நகரின் ஜாமிமொரா மோசோனி என்ற பகுதியில் ரோஹிங்யா அகதிகள் முகாம் ஒன்று அமைந்துள்ளது. அந்த முகாம் அருகே போதை பொருள் கடத்தல், ஆள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்று இருப்பதாக அந்நாட்டு அதிரடி படையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள் சிலர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போலீசாருக்கும் கடத்தல் கும்பலுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என சந்திகிக்கப்பட்ட ரோஹிங்யா அகதிகள் 7 பேர் அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.