ரூ.500, 200 நோட்டுகளாக லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் – காரணம் இதுதான்

359 0

மார்ச் மாதத்துக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று வதந்தி பரவியதால் 500, 200 ரூபாய் நோட்டுகளாக லஞ்சம் வாங்கிய துணை கலெக்டரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரைக் கட்டணம் தனித்துணை கலெக்டராக தினகரன் பணியாற்றி வந்தார்.

இவர் போளூரை சேர்ந்த விவசாயி ரஞ்சித்குமாரிடம் பத்திரப்பதிவின்போது நிலத்துக்கு உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தாத விவகாரத்தில் பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.

அப்போது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அன்று இரவும், மறுநாளும் தினகரன் அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர் பதுக்கி வைத்திருந்த 78 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்கள் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

துணை கலெக்டர் தினகரன் சில நாட்களுக்கு முன்பு ஆய்வுக்குழு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிக்கு சேராமல், நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக தீர்ப்பதாக அதற்காக, சம்பந்தபட்டவர்களிடம் லஞ்சம் வாங்கி இந்த பணத்தை குவித்திருக்கிறார். இந்த பணம் அனைத்தும் அவர் கடைசி ஒரு மாதத்தில் லஞ்சமாக வாங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றிய கணக்கில் வராத பணத்தை கருவூலத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்கின்றனர்.

வேலூர் கலெக்டர் ஆபீசில் செயல்பட்டு வந்த தினகரன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் உட்பட மொத்தம் 11 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உள்ளனர். அதற்கு பிறகு இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உண்டா என்ற முழு விவரம் தெரியவரும்.

மார்ச் மாதத்துக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று வதந்தி பரவியதால் அதை நம்பிய தினகரன் லஞ்சம் வாங்கியவர்களிடம் 500, 200, 100 ரூபாய் நோட்டுகளையே லஞ்சமாக தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். இந்த பணத்தை தனது வீட்டில் உள்ள டிரங்க் பெட்டியில் பதுக்கி வைத்துள்ளார்.

தினகரனிடம் விசாரணைக்கு பிறகே இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள். இது தொடர்பாக தினகரனை போலீஸ் காவலில் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.