ஈரானில் பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தவும், சிகிச்சைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் சீன மருத்துவ நிபுணர்கள் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது.
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரான் நாட்டிலும் கொரோனா பரவியுள்ளது. அந்நாட்டின் குவான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனாவுக்கு இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 388 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பு ஏற்படுள்ள நாடு ஈரான் ஆகும்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக போதிய ஆலோசனைகள் வழங்கவும் சீனா முன்வந்துள்ளது.
இதற்காக மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றையும் ஈரான் நாட்டிற்கு சீனா அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் ஈரானில் உள்ள மருத்துவர்களுக்கு கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது, உயிரிழப்பை தடுப்பது எவ்வாறு என பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

