சார்க் அமைப்பின் புத்தெழுச்சியில் தங்கியிருக்கிறது தெற்காசிய பிராந்திய ஒருமைப்பாடு!

450 0

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) மிகவும் உயர்ந்த மட்டங்களில் முழுமையாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாக மாறுவதிலேயே பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பிராந்திய ஒருமைப்பாடு வெற்றிகரமானதாக அமைய முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னிந்திய நகரமான பெங்களுருவில் ஞாயிறன்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்ததையடுத்து 2017 காத்மண்டு சார்க் உச்சிமாநாடு ஒத்தி வைக்கப்பட்டமை இந்தப் பிராந்திய அiமைப்பை ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று கூறிய விக்கிரமசிங்க பிராந்திய நாடுகள் கேந்திர முக்கியத்துவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவின் பிரபலமான தேசிய ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான ‘த இந்து’வினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ‘சிந்தனை முகாம்’ (2020 The Hindu Huddle) இத்தடவை கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில் ஐ.ரி.சி கார்டினியா ஹோட்டலில் இரு நாட்கள் நடைபெற்றது. 2ஆம் நாள் நிகழ்வை ஆரம்பித்து வைத்த முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்க ‘ தெற்காசிய அரசியலில் இந்தியாவின் பாத்திரம் ‘ என்ற தொனிப்பொருளில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் அவர், தென்னிந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பொருளாதார பிணைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

எல்லை கடந்த பயங்கரவாதம் உட்பட தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய விக்கிரமசிங்க, அல்லாவிட்டால் தெற்காசியாவிற்குள் இருக்கும் நாம் அல்ல, வெளியார் வந்து பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூற வேண்டிய நிலை தோன்றும் என்றும் அறிவுறுத்தினார்.

சார்க் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. பிம்ஸ்ரெக் என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற பல்துறை விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பு சார்க்கிற்கான ஒரு பதிலீடு அல்ல, அது பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான ஆரம்பப்புள்ளியும் அல்ல. என்று குறிப்பிட்ட விக்கிரமசிங்க பொருளாதார ஒன்றிணைப்பு பயணத்திட்ட யோசனையொன்றையும் முன்வைத்தார்.

மொத்தம் 30 கோடி சனத்தொகையையும் 50000 கோடி டொலர்களுக்கும் அதிகமான கூட்டு நிகர உள்நாட்டு உற்பத்தியையும் கொண்ட இலங்கையையும் இந்தியாவின் 5 தென் மாநிலங்களையும் உள்ளடக்கிய உப பிராந்திய கருத்துருவாக்கம் ஒன்றை செய்வது முக்கியமானதாகும்.

அந்தமான் தீவுகள் மற்றும் தாய்லாந்தின் புக்கெட் தீவு உட்பட பிரபலமான நகரங்களையும் வனப்பு மிகு கடற்கரைகளையும் கொண்ட வங்காள விரிகுடா உலகின் மிகப் பெரிய ஒரு குடாவாகும். மில்லியன் கணக்கில் உருவாகி வரும் ஆசிய மத்தியதர குடும்பங்களின் பொழுதுபோக்கிற்காக ஆடம்பர கப்பல் சுற்றுலா இந்தப் பிராந்தியத்துக்கான புதியதொரு வர்த்தக வாய்ப்பாக இருக்கிறது. இதை பிராந்திய நாடுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொருளாதார ஒன்றிணைப்புக்கான பயணத்திட்டம் என்ற தனது யோசனை சந்தையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாக இருக்காமல் ஆசியான் நாடுகள் தலைமையிலான விரிவான பிராந்திய பொருளாதாரத் தோழமை உடன்படிக்கையை விடவும் ஆழமான ஒருமைப்பாட்டை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இரு வருடங்களுக்குள் பூர்த்தியாக வேண்டுமென்றும் விக்கிரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டார்.

அடுத்து, த இந்து குழுமத்தின் தலைவர் என். ராமின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சபையோரிடமிருந்து வந்த ஒரு கேள்விக்கு பதிலளித்த விக்கிரமசிங்க தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது பற்றி கூறுகையில், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் தொடர்பான கடனைக் கையாளுவதற்கு பல்வேறு தெரிவுகளை அன்று தனது அரசாங்கம் ஆராய்ந்ததாகக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முதலில் கைச்சாத்திடப்பட்ட சீனாவுடனான உடன்படிக்கையை தனது அரசாங்கம் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்திய போது சீன ஜனாதிபதி ஜின்பிங் ஒரு கடும்போக்கு நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்று விக்கிரமசிங்க கூறினார்.

துறைமுகத்தின் பாதுகாப்புடன் தொடர்புடைய சகல அம்சங்களும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை தாங்கள் உறுதி செய்ததாக கூறிய விக்கிரமசிங்க, இந்தியாவுக்கு விரோதமானதென்று கருதப்படக்கூடிய எந்த ஒரு நடவடிக்கைக்காகவும் எமது மண் பயன்படுத்தப்படுவதை நாம் அனுமதி;கப்போவதில்லை என்று கூறினார்.

‘தற்போது சீனர்கள் எமது பிராந்தியத்திற்கு தங்களது பெரிய கப்பல்களை கொண்டு வர முடியாதென்று நான் நினைக்கிறேன். அவர்கள் அடிப்படையில் மிகவும் உறுதி வாய்ந்த பொருளாதார ராஜதந்திரமொன்றில் ஈடுபடுகிறார்கள். அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதிலேயே எல்லாம் தங்கியிருக்கிறது. ‘ என்றும் முன்னாள் பிரதமர் கூறினார்.

(த இந்து)