யாழில் இன்று மற்றுமொரு இளைஞன் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது

295 0

downloadயாழ்ப்பாணம் – பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டமைக்கான ஆவணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே இந்தக் கைதுகளை மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இராணுவத்தின் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் தமிழ் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான 29 வயதுடைய அன்டனி தாஸீஸியஸ் அரவிந்தன் என்பவரும் ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, சில்லாலை பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற இளைஞர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கந்தர்மடம் அலுவலகத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.

கொழும்பிலிருந்து சென்றுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவாரமாக நடத்திவரும் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள்வெட்டு உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிக்கப்படுபவர்களை கைதுசெய்து வருகின்றனர்.

இதற்கமைய நேற்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இந்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய கொக்குவில் கெங்காதரன் பிருந்தாபன் வயது 20, திருநெல்வேலிப் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கமல்நாத் ஆகிய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவரை கைதுசெய்யும்போது பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டதுடன் அவர்களை கைதுசெய்தமைக்கான ஆவணத்தையும் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர்.
எனினும் ஒருவருக்கு கைதுசெய்தமைக்கான சான்றுப்பத்திரம் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆவா குழுவுடன் தொடர்புடைய கைது தொடர்பில் இன்று காலை வரை தமக்கு 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் அதிகாலை மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.