மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் காயங்களுடன் மீட்பு.

3569 0

battigirl-5மன்னார் உயிலங்குளம் சென்பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை இரவு காயங்களுடன் நொச்சிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

முதுகுப்பகுதியில் பலத்த எறிகாயங்களுடன் குறித்த குடும்பஸ்தார் மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி வயது 38 என்ற குடும்பஸ்தர் நேற்று முந்தினம் புதன் கிழமை அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த கடத்தல் குறித்து அவரது மனைவி நேற்று முன்தினம் இரவு மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று முந்தினம் அதிகாலை 2.30 மணியளவில் ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கண் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு நொச்சிக்குளம் கிராம பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் அபாயக்குரலை செவிமடுத்த சிலர் உடனடியாக உயிலங்களம் காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயங்களுடன் காணப்பட்ட குறித்த குடும்பஸ்தரை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த குடும்பஸ்தரின் கடத்தல் குறித்து மன்னார் மற்றும் உயிலங்குளம் காவல்துறையினர் விசாரனைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

Leave a comment