கிரிக்கெட் விளையாட்டின்போது பந்து தன் மீது விழுந்ததால் 12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட நபர்

66 0

உத்தரகாண்டில் கிரிக்கெட் விளையாட்டின் போது சிறுவர்கள் அடித்த பந்து தன் மீது விழுந்ததால் ஒரு நபர் 12 வயது நிரம்பிய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் தஹ்ரி மாவட்டம் பேஹ்டி கிராமத்தில் நேற்று சிறுவர்கள் சிலர் இணைந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அக்கிராமத்தை சேர்ந்த ராம்லால், பிஜேந்திர கண்டாரி என்ற இரண்டுபேர் மது அருந்திவிட்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து ராம்லால் மீது பட்டு கீழே விழுந்தது. இதையடுத்து, அந்த பந்தை எடுக்க கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ராம்லால் அருகே வந்தான்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுவன்
அப்போது கிரிக்கெட் பந்து தன்மீது விழுந்ததால் ஆத்திரமடைந்த ராம்லால் தன்னுடன் இருந்த பிஜேந்திர கண்டாரி வைத்திருந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டு பந்தை எடுக்கவந்த சிறுவன் மீது சுட்டான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவனின் முகத்தில் குண்டு பாய்ந்து அவன் படுகாயமடைந்தான். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மது போதையில் இருந்த ராம்லால் மற்றும் அவனது கூட்டாளி பிஜேந்திர கண்டாரியை கைது செய்தனர். மேலும், சிறுவனை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.