அரசியல் இருப்புக்காக மாறும் கல்விக்கொள்கைகளால் என்ன பயன் – சிறிதரன் கேள்வி

214 0

இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை எனப் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சிறிதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதன்மை விருந்தினராகப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டு முன்பள்ளி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த கட்டடமானது துரித கிராமிய அபிவிருத்திட்டத்தின்கீழ் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,

இலங்கையின் கல்விக்கொள்கைகள் அரசியல் இருப்புக்காகவே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களினால் அமைக்கப்படுகின்றன எனவும், துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அந்த வகையில் 2 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகள் பாடசாலைகள் கல்வி திணைக்களத்தின் கீழ் கல்விக் கொள்கைகளிற்காக இயங்க வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பு அக்காலப்பகுதியில் தனியான கட்டமைப்புக்களை உருவாக்கி முன்பள்ளிகளை தரமாக வழிநடத்தினார்கள். ஒரு விடுதலை அமைப்பினால் இதனைக் கொண்டு செல்ல முடியும் எனில் ஏன் ஓர் அரசாங்கத்தினால் கொண்டு செல்ல முடியாது உள்ளது எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போதும் புதிய கல்விக்கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் கல்வியில் முன்னேற்றம் எட்டப்படுவதில்லை. இலங்கையின் கல்விக்கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக உருவாக்கப்படுகின்றன. அத்துடன் கல்விக்கொள்கை மாறாத வரையும் கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.

நாட்டின் வழிகாட்டிகளாகப் பல்கலைக்கழகங்கள் இருக்கும் அதேவேளை அவை உயர்ந்த பார்வையில் பார்க்கப்படுகின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூற வெட்கப்படுகின்றார்கள். அரசியல் என்பதற்கு அப்பால் எமது சமூகம் தவறான பாதையில் செல்கின்றது. எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது எமது சமூகம் சீரழிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், கிளிநொச்சியில் ஒரு தனியார் கல்வி நிலையத்தை நடத்தி வரும் ஆசிரியர் தனது கல்வி நிலையத்தை மூடப்போவதாக அண்மையில் குறிப்பிட்டார்.

அதாவது, போதைப்பொருள் பாவனையால் சின்னாபின்னமாகிப்போயுள்ள இளைஞர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்விக்காகச் செல்கின்ற மாணவிகள் மீது துன்புறுத்தல்கள், பாலியல் சேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆசிரியர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெற்றோர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமது பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் தொடர்பில் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்த சமுதாயம் ஏன். இவ்வாறானதொரு நிலைக்குச் சென்றுள்ளது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்.

;ஒரு காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயர்ந்த பார்வையில் பார்த்த நிலையில், இன்று இவ்வாறு பின்னோக்கி சென்றமைக்கான காரணம் என்ன? எமது வளர்ப்பு முறையில் குறைபாடுகள் உள்ளதா என்பதைப் பெற்றோர்களாகிய நாங்கள் நிச்சயமாகத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்காது போனால் மிக மோசமான சமூகமாக எமது இனம் மாறும் நிலையே இன்று காணப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.