இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு: திருப்பூரில் மறியல்; கல்வீச்சு, கடையடைப்பு

290 0

திருப்பூரில் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இந்து முன்னணி கோட்ட செயலாளரின் கார் நேற்று அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் நடவடிக்கை கோரி இந்து முன்னணி அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி அமைப்பின் கோட்ட செயலாளராக இருப்பவர் பி.மோகனசுந்தரம் (38). இவர் திருப்பூர் கொங்கு பிரதான சாலை பகுதியில் வசித்து வருகிறார். அங்கு சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். வீட்டின் உள்ளே கார் நிறுத்த இடம் இல்லாத காரணத்தால் சாலையோரத்தில் நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் சம்பவ இடத்தில் திரண்டதோடு, கொங்கு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.

 

முகமூடி அணிந்த 4 பேர்

அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவை போலீஸார் ஆய்வு செய்தபோது 2 இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து வந்த 4 பேர், காருக்கு தீ வைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் சந்திப்பு, எம்.எஸ். நகர் அருகே ராதா நகர் பகுதியில் வந்த நகர அரசுப் பேருந்துகள் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிற்றுந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

போயம்பாளையம் நஞ்சப்பா நகர் உட்பட 2 இடங்களில் பேக்கரிகள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சில இடங்களில் முன்னெச்சரிக்கையாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தாராபுரம் சாலை, ராயபுரம், பெருமாநல்லூர் சாலை, கொங்கு பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்து முன்னணி மாநில செயலாளர் ஜே.கிஷோர்குமார் கூறும்போது, “இதற்கு முன்பு இதேபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை. அதுவே இதன் தொடர்ச்சிக்கு காரணம்.

இதனால் உணர்ச்சிவசப்பட்டு சிலர் கல்வீச்சு, கடையடைப்பு செய்திருக்கலாம். எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை” என்றார். மாநகர காவல் ஆணையர் வி.பத்ரி நாராயணன் கூறும்போது, “சம்பவத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

மோகனசுந்தரம் சீட்டு நடத்தி வருபவர் என்பதால் கொடுக்கல் வாங்கல் விவகாரம் காரணமாக இருக்குமா எனவும் விசாரிக்கப்படுகிறது.