கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
2015-2020ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வளவு வாகனங்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன மற்றும் அதற்காக செலவிடப்பட்டுள்ள நிதி தொடர்பாக கடந்த நாடாளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த அரசின் காலத்தில் வாகனக் கொள்வனவுக்காக பாரிய அளவில் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக எதற்காக இவ்வளவு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

