கொரோனா பாதிப்பில் இருந்து தப்பி விட்டோம்- ஆரணி மருத்துவ மாணவி பேட்டி

346 0

சீனாவில் இருந்து வெளியேறியதால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பி விட்டோம் என்று ஆரணி திரும்பிய மருத்துவ மாணவி கூறியுள்ளார்.

ஆரணி, கொசப்பாளையம், தியாகி சுப்பிரமணியம் தெருவை சேர்ந்த வக்கீல் எம்.மூர்த்தி என்பவரின் மகள் நிரஞ்சனா சீனாவில் உள்ள ஷாண்டாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு டாக்டருக்கு படித்து வருகிறார். இவர் செப்டம்பர் 5-ந்தேதி இந்தியாவில் இருந்து சீனா சென்றார். 12-ந்தேதி முதல் அவருக்கு வகுப்புகள் தொடங்கியது.
தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவில் மருத்துவப் படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேதி குறிப்பிடாமல் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து அங்கு படித்து வந்த மாணவ-மாணவிகள் தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிரஞ்சனா நேற்று முன்தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ஆரணிக்கு வந்து சேர்ந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் படிக்கும் மருத்துவ கல்லூரியில் இந்தியாவில் இருந்து 250 மாணவ- மாணவிகள் மருத்துவப்படிப்பு படித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து 100 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு என்னுடன் 3 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே விடுமுறை விடப்பட்டதால் இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் திரும்பி விட்டனர். முதலாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் மட்டும் அங்கு இருந்தோம், வருகிற 24-ந்தேதி மருத்துவ படிப்பிற்காக பதிவு செய்ய வேண்டிய காரணத்தால் அங்கேயே தங்கி இருந்தோம்.
தற்போது பல்கலைக்கழகம் மார்ச் முதல் வாரத்தில் திறக்கும் தேதி அறிவிக்கப்படுவதாகவும் அதன் பின்னர் வந்தால்போதும் என அறிவித்து, எங்களை சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து பாங்காங் வழியாக சென்னைக்கு அனுப்பியது. இதனால் நாங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பி விட்டோம்.
பீஜிங்கிலும், பாங்காங்கிலும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக பாதுகாப்பு கவசங்கள் அணிந்தவாறு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து அனுப்பினார்கள். அதே போல் சென்னையிலும் தமிழக சுகாதாரத் துறையினரும் எங்களை மருத்துவ பரிசோதனைகள் செய்து எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்த பின்னர் தனிமைப்படுத்தாமல் பெற்றோருடன் ஆரணிக்கு அனுப்பி வைத்தனர்,
ஆனால் நாங்கள் ஆரணி வருவதற்குள் ஆரணியில் உள்ள மருத்துவ குழுவினர் எங்கள் வீட்டிற்கும், எங்கள் வீட்டின் அருகாமையிலும் தூய்மைப் பணிகள் செய்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த 2 நாட்களாக ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் வீட்டிற்கு வந்து கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், வீடுகளை சுத்தம் செய்து மாசு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள், உடல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் என அறிவுறுத்தினார்கள். நான் எனது தாய், தந்தை, சகோதரியுடன் நலமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.