கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க அனுமதி

435 0

201607010724420203_Kudankulam-2nd-nuclear-power-allowed-start-preparatory-work_SECVPFநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல் அணு உலையில் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு முதல் வணிக ரீதியான மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. அந்த அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது.
அணு உலையின் நிர்மாணப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட்டது. இந்த அணு உலையில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தினர். ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்திக்கு 2-வது அணு உலை தயாராகி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அணு உலையில் தாங்கள் நடத்திய பல்வேறு கட்ட சோதனை அறிக்கைகளை மத்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையை ஆய்வு செய்த அந்த வாரியம், 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்க கடந்த ஜூலை 27-ந் தேதி அனுமதி அளித்துள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம், 2-வது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் அணுமின் நிலையத்துக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த இரு துறைகளின் அதிகாரிகள் அனுமதி கொடுத்தவுடன் 2-வது அணு உலையில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படும். இந்த சோதனைகள் முடிக்கப்பட்டு அணு உலையில் அணுப்பிளவு நடத்தப்படும். பின்னர், படிப்படியாக சோதனைகள் முடிக்கப்பட்டு, 3 மாதங்களில் இந்த அணு உலையில் வணிக ரீதியாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment