தமிழக அரசின் கடன் சுமைக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?-கருணாநிதி

18250 0

201607010838553712_answer-to-debt-burden-of-TN-Jayalalithaa-Karunanidhi_SECVPFதமிழக அரசின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாகவும், அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் என்னவென்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த 23-6-2016 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா துறைவாரியாக தங்கள் ஆட்சியில் என்னென்ன காரியங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்ற விவரத்தையெல்லாம் தொகுத்து வழங்கினார்.

11-1-2010 அன்று இதே ஜெயலலிதா கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் பேசும்போது, “ஏற்கனவே கற்பனை செய்து பார்க்க முடியாத, தாங்கிக்கொள்ள முடியாத கடன் சுமையில் தமிழ்நாடு சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 2006-ம் ஆண்டு 31 மார்ச் வரை அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 56,094 கோடி ரூபாய். 2009-2010-ம் ஆண்டிற்கான தி.மு.க. அரசின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒட்டுமொத்தக் கடன் சுமை 85,395.84 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது என்று பொருள். இதற்கு என்ன பொருள் என்றால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும், தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது என்று பொருள்படுகிறது” என்றெல்லாம் பேசினார்.

ஜெயலலிதா இவ்வாறு பேசிய பிறகு, 2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து அவர்கள்தான் ஆளுங்கட்சியாக இருந்து தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.

தற்போது, மாநிலங்களின் நிதிநிலை குறித்த கையேட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆய்வுசெய்துள்ள ரிசர்வ் வங்கி, இந்தியாவில் நிதிப்பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது. ஒரு மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண்டும் என்றால், நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அந்தவகையில் மராட்டிய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இவ்விஷயத்தில் தமிழகம் தோல்வியடைந்து விட்டது. இனிவரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த கடன்சுமை அதிகரிப்பதற்குத்தான் இது வகைசெய்யும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டு நேற்றையதினம் அறிவித்துவிட்டது. அதைப் பின்பற்றி தமிழகத்திலும், தமிழக அரசின் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் கடன் மேலும் அதிகரிக்கும். நிதி நிர்வாகத்தை அரசு மேம்படுத்தாவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் மீளமுடியாத கடன்சுமையில் தமிழகம் சிக்குவது உறுதி. ஆனால், இந்த ஆபத்தில் இருந்து தமிழகத்தைக் காப்பதற்கான எந்த முயற்சியையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.

கடந்த 5 ஆண்டு ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு எந்தவகையிலும் முன்னேற்றம் அடையவில்லை. 2011-ம் ஆண்டில் ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் நேரடிக் கடனை இப்போது ரூ.2.47 லட்சம் கோடியாகவும், மறைமுகக் கடனையும் சேர்த்து ஒட்டுமொத்தக் கடனை ரூ.4.48 லட்சம் கோடியாகவும் உயர்த்தியதுதான் ஜெயலலிதா அரசின் முதல் சாதனையாகும்.

2010-ம் ஆண்டு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேரவையில் இந்தக் கடன் சுமை பற்றி என்ன சொன்னார் தெரியுமா? “இந்த கடன் சுமை எதனால் ஏற்பட்டது? தமிழ்நாடு அரசின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களான சாலை அமைத்தல், பள்ளிக்கூடங்கள் கட்டுதல், புதிய மருத்துவமனைகள் தொடங்குதல் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதற்காக இவ்வளவு பெரிய கடன் பெறப்பட்டதா? இல்லை. அதற்குப் பதிலாக எந்தப் பயனும் இல்லாத வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் இதர இலவசப் பொருள்களுக்காக, இந்தக் கடன் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று பேசினார். இன்றும் பேரவையின் அவைக் குறிப்பிலே இந்தப் பேச்சு இடம் பெற்றுள்ளது.

ஆனால் இப்போது ஜெயலலிதா 5 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த பிறகு என்ன நிலைமை? தமிழகத்தின் கடன் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால், 2010-2011-ல் 91,050 கோடி ரூபாய். 2011-2012-ல் 1,03,999 கோடி ரூபாய். 2012-2013-ல் 1,20,205 கோடி ரூபாய். 2013-2014-ல் 1,40,042 கோடி ரூபாய். 2014-2015-ல் 1,78,171 கோடி ரூபாய். 2015-2016-ல் 2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியில் கடனை வெகுவாகப் பெருக்கியிருக்கிறார்கள் என்று ஒரு ஆங்கில நாளேடு எழுதியது.

மின்வாரியம் போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களையும் சேர்த்தால் தமிழக அரசின் கடன் சுமை 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியபோது ஜெயலலிதா பேசிய பேச்சு என்ன?. சொன்ன காரணங்கள் என்ன?. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வாங்கிக் கொடுத்ததால்தான் கடன் சுமை ஏற்பட்டது என்று பேசினாரே, தற்போது அவர் வாங்கி வைத்துள்ள கடன்சுமைக்கு அவர் பதிளிக்கப்போகும் பதில் என்ன?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment