சீனாவிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்திவருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (28) காலை அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவின் வூஹான் நகரில் உள்ள 30 இலங்கை மாணவர்கள் பற்றி பேஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகமும், அங்குள்ள இலங்கை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
சீனாவின் வூஹான் நகருக்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ எவருக்கும் அனுமதி வழங்கப்படாமையினால், இந்த 30 மாணவர்களையும் தாய்நாட்டுக்கு அழைத்துவர முடியாத நிலை காணப்படுகிறது. வூஹான் பிரதேசத்தை தவிர்ந்த ஏனைண பகுதிகளில் இருக்கும் 557 இலங்கையருள் 204 பேர் நாடு திரும்பியிருப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (28) மேலும் 103 பேர் இலங்கை வரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சீனாவின் வூஹான் மாநிலத்திலிருந்து வரும் சகல இலங்கை மாணவர்களும் தியதலாவ இராணுவ முகாமில் இரண்டு வாரங்களுக்கு கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவுள்ளார்கள். சீனாவிலிருந்து வருகைதரும் ஏனைய இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அவர்களின் உடல் நிலை பற்றி பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மூலம் அடிக்கடி பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

