கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் அரசுப் பள்ளி மாணவர்!

45 0

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவர் தண்டபாணி கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதுடன், பொருட்களை அடையாளம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் மகன் தண்டபாணி (13). இவர் பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், தன் முன் நிற்கும் நபர்களை அடையாளம் காண்பித்தல், பொருட்களை பற்றிக் கூறுதல் ஆகியவற்றை அநாயசமாகச் செய்கிறார்.

இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முன்னிலையில் தண்டபாணியின் கண்களைத் துணியால் கட்டி நிற்க வைத்தது. அங்கிருந்த ஆசிரியர்கள் ரூபாய் நோட்டு, விசிட்டிங் கார்டு போன்றவற்றைக் காட்டி அதுகுறித்துக் கேட்டதற்கு, மாணவர் தண்டபாணி சரியான பதிலளித்தார். மாணவரின் இந்தத் திறன் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அக்கம்பக்கத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துக் கூறிய மாணவர் தண்டபாணி, ”படிப்பில் சரிவரக் கவனம் செலுத்த முடியாத நிலையில் நினைவாற்றாலை அதிகரிக்கப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன் மூலம் கண்களைக் கட்டிய பின்னும் எதிரே உள்ளவற்றைக் கண்டறியும் ஆற்றல் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்துப் பயிற்சியாளர் வேல்முருகன் கூறும்போது, ”மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் நினைவாற்றாலை அதிகரிக்கப் பயிற்சி அளித்து வருகிறேன். அவ்வகையில் மாணவர் தண்டபாணிக்குப் பயிற்சி அளித்தேன். இதன் மூலம் மாணவரிடையே உள்ள அதீத ஆற்றல் வெளியே தெரியவந்தது” என்றார்.