பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!

359 0

பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நடைப் பயணத்தையும் பரப்புரைகளையும் மேற்கொண்டபோது அதனை மேற்கொண்ட தமிழின விடுதலைச் செயற்பாட்டாளர்களை அழைத்துப் பேசி உற்சாகத்தை வழங்கியதோடு அதற்கான அரசியல் செயற்பாடுகளை செய்வோம் என்று இது சம்பந்தமாக பிரான்சு சனாதிபதி அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 டிசெம்பர் மாதம் மாநகரசபை ஏற்பாட்டில் ஆளும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்கள் போன்றவர்களை அழைத்து மாநாட்டினை நடாத்தியிருந்தனர்.

இம் மாநாட்டில் தமிழர் தரப்பில் சர்வதேச ரீதியாகவும், ஐரோப்பிய பாராளுமன்றம், ஐ.நா. மனிதஉரிமைகள் செயலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றவர்கள். இளையவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தமிழர்களின் 70 வருடகால போராட்டம் பற்றியும், சிங்கள் பௌத்த தமிழர் விரோத செயற்பாடும் அதன் தொடர்ச்சியாய் தொடர்ந்த இனக்கலவரங்கள் கல்வித் தரப்படுத்தல் முதல் இறுதி முள்ளிவாய்க்கால் வரை சான்றுகள் பகிரப்பட்டது. அன்றைய நாளில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவும் விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளர் கூட தமிழர் தரப்பின் நியாயங்களைக் கேட்டு அமைதியாக இருந்தமையும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு.

தமிழினப்படுகொலைக்கு சவர்வதேச நீதி காண வேண்டும். 70 வருடங்களாக இத்தனை தமிழர்களின் உயிர், உடமை அழிவுக்கும் நிம்மதியான சுதந்திரமான வாழ்வுக்கும் ஒரே தீர்வு தமிழீழமே என்பதையும் தெரியப்படுத்தப்பட்டது. இத்தீர்மானம் ஏற்கனவே பாசிலோனா, கத்தலோனியா இடங்கங்களில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தீர்மானத்தை முதற்சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து 28 நாட்கள் நிறைவில் மீண்டும் இன்று மாநகர மண்டபத்தில் முதல்வர் முன்னிலையில் அனைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் முதல்வரின் முன்மொழிதல் மூலம் அத்தீர்மானம் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. 2020 இல் இந்த முக்கியமான செயற்பாட்டை, அடுத்த கட்டம் நோக்கி செயற்படுத்துவதற்கு ஊக்கசக்தியாக அமைந்திருப்பதாகவே பல தாயகச்செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நகரங்களிலும் நகரசபைகளிலும் தமது தமிழ்ச்சங்கங்கள் மூலம் முன்னெடுக்க இதுவோர் ஊக்க சக்தியாக இருக்கும். வரும் உள்ளூராட்சித்தேர்தலும், அதில் எமது தரப்பில் நியமிக்கப்படும் வேட்பாளர்களும் அவர்களின் வெற்றியும் எமது மக்களின் ஓரணியிலான பங்களிப்பும் வரும் காலத்தில் தமிழினத்தின் இலக்கை அடைய ஏதுவாக இருக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைகின்றது.