அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

217 0

அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக துன்புறுத்திய அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜெயதிலக மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ;சந்திர பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிகளுக்கிடையிலான காலக் கட்டத்தில் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் உழியர்கள், ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் சேவை தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான அதிகார வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையம், குற்றவியல் புலனாய்வுத் துறை, இலங்கை பொலிஸ் துறையின் நிதிக் குற்ற புலனாய்வு பிரிவு அல்லது இலங்கை பொலிஸ் துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் மூலம் அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விசாரிக்கவும் இந்த ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.